Wednesday, September 19, 2012

சோற்றுக்காக சைக்கிளில் ...

பள்ளிவிட்டு வரும் போது தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது -- தேருமுட்டி தெருவில் முச்சந்தியில் ஒரே கூட்டமாக இருந்தது.  என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள்ளே ஒரு ஆர்வம் துடித்தது.

முச்சந்தியில் ஒரு மூங்கில் மரம் நடப்பட்டிருந்தது. அதன் உச்சியில் ஒரு ஸ்பீக்கர் கட்டபட்டிருந்தது. கீழே மக்கள் குழுமி இருந்தனர். சின்ன பிள்ளைகள் குறுக்கும் நெருக்கும் ஓடி கொண்டிருந்தனர். அட! சில தாவணிகளும் தென்பட்டது. கிட்ட நெருங்க நெருங்க என்ன நடக்குதுன்னு அறிய முடிந்தது.

"டேய் மச்சி! என்ன விஷேசம்! என்ன நடக்குது?"

"யாருன்னு தெரியல்ல! ஒரு ஆளு மூனு நாளைக்கு நிறுத்தாம சைக்கிள் ஓட்ட போறாராம். குடும்பத்தோட கேம்ப் அடிச்சியிருக்காரு!"

"மூனு நாளா? எப்பிடிடா? முடியுமா என்ன?!"

"தெரியல மச்சான், பார்க்கலாம்!"

- ஒரு பழைய டேப் ரெக்காடர், சில டேப்கள் மஞ்சள் பைககுள், ஒரு ஒலிப்பெருக்கி.

- ஒரு நடு வயது பெண்மணி, நைத்து போன புடவையுடனும், கிழிந்து போன மேலாடை, நருங்கி போன உடலும், ஆசை மிகுந்த கண்களுடனும், தன் ஆம்பளைக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

- ரெண்டு குழந்தைகள், கிழிந்த பாவடையும் சட்டையுமாக, மூக்கு ஒழுக, ஒட்டிய முகத்துடன் தாயாருக்கு துணையாக வேலை செய்து கொண்டிருத்த்துகள்.

- ஒரு டோலக்கு, ரெண்டு பாத்திரங்கள்.

- ஒரு சைக்கிள் - கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ், சில ஜோடனைகள், ஒரு சாமி படம், எல்லாம் இருந்த்தது.

பக்கத்தில் இருந்த ஒரு வீட்டுக்காரரிடம் கெஞ்சி கொஞ்சம் மின்சாரம் எடுத்து டேப் ரெகார்டரில் பாட்டு போட்டு சத்தம் சரியாய் வருதா என்று டெஸ்ட் பண்ணி பார்த்து கொண்டார். சாமி படத்துக்கு சூடம் ஏற்றி கடவுளை வேண்டி கொண்டார். இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்த பிள்ளைகளை முதுகில் தட்டி சாமி கும்பிட சொன்னார்.

"கடவுளே! இந்த ஊர் சனங்களுக்கு இரக்கம் உள்ள மனச கொடு. சோறும் காசும் கொடுக்க நல்ல வசதிய கொடு. சைக்கிள ஓட்ட தெம்பும் மனசும் கொடு!" சூடம் காட்டி சைக்கிளை கும்பிட்டு மேல ஏறி மிதிக்க ஆரம்பித்தார். ஊர் சனங்க கை தட்டி அவர உற்சாக படித்தினர்.

அந்த டேப்பை போட்டு விட சாமி பாட்டோடு தொடங்கியது. ஊர் மக்கள் கை தட்டி கொண்டிருந்தனர். அந்த முங்கில் மரத்தை சுற்றி வலம் வந்தார். சைக்கிள சில வித்தைகள் செய்து காண்பித்தார்.  வித்தைகள் செய்யும் போதெல்லாம் அந்த குழந்தைகள் தட்டு ஏந்தி மக்களிடம் வந்து நின்றனர். சிலர் புகழ்ந்து பேசி காசு போட்டனர். காசு போட்டா அந்த குழந்தைகள் சில வித்தைகள் செய்து காண்பித்தனர்.

சில நிமிஷங்கள், மணிகள் கடந்தன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக களைந்து போயி கொண்டிருந்தது. வீடுகளில் வெளக்கு ஏற்ற மக்கள் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினர். அந்த பெண்மணி பாத்திரம் எடுத்து வீட்டு வாசலில் வந்து நின்று "அம்மா! ஏதாவது மீதி இருந்தா போடுங்கம்மா!" என்று கூவினார். சிலர் சோறு போட்டனர், சிலர் "அப்பறமா வாம்மா!" என்று சொல்லி அனுப்பினர்.

முதல் நாள் இரவு, சிலர் வெகு நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தனர், இன்னும் ஒட்டி கொண்டிருக்கிரா, என்று பார்த்து விட்டு சென்றார்கள்.

நானும் சென்று பார்த்தேன், ரெண்டாம் நாள் இரவில். அவர் களைத்து போய் சைக்கிளில் உட்கார்ந்த வண்ணம் முங்கில் மரத்தில் சாய்ந்து உறங்காமல் உறங்கினார். பிள்ளைகள் மடங்கி சுருங்கி தூங்கி கொண்டிருந்தனர். அந்த பெண்மணி கணவனின் காலை பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். நடுநடுவே காலை தொட்டு கண்களில் ஒத்தி கொண்டார்.

அந்த நிலையில் பார்த்துடன் எனுக்குள் என்னவோ நடந்தது. வயிற்ருக்குள் என்னவோ சுருண்டு கொண்டு வந்தது. என் கண்களில் தண்ணிர் கொட்டியது.  வீட்டக்குள் ஓடி ஓ என்று கத்தாமல் கத்தி அழுதேன். கடவுளே! கடவுளே! என்று கதறினேன்.

யாருக்கும் தெரியாமல் என்னோட உண்டியலையும் போர்வையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் வெளியே ஓடினேன். உண்டியலை அந்த அம்மாவிடம் கொடுத்தேன். போர்வையை அந்த குழந்தைகள் மேல் போர்த்தி விட்டு அப்படியே அவர் காலில் விழுந்து வணங்கினேன்! "இறைவா! இந்த குடும்பத்தை காப்பாற்று!", என்று வேண்டினேன்.
  

2 comments: