Sunday, September 30, 2012

சிவதூதன்!

சீர்காழி சென்றிருந்தார்கள்! செருப்பை காரில் விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் டிக்கெட் ஒன்று கிழித்து கொடுத்தார். டிரைவர், "சார், அஞ்சு ரூபா! பார்க்கிங்!" என்றார். அவருக்கு காசு எடுத்து கொடுத்து விட்டு குடும்பத்தோடு கோயில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வழியில் சிலர் பூ விற்று கொண்டிருந்தனர். சிலர் சைக்கிளில் இளநீர் கட்டி வைத்து விற்றுக்கொண்டிர்தனர். மேலும் பல வர்த்தகங்கள் நடத்து கொண்டிருந்தன.

பிள்ளைகள் இளநீர் வேண்டுமென்று கேட்க இளநீருக்காக நின்றோம். அவர் இளநீர் சீவிய அழகை போட்டோ எடுத்துக்கொண்டனர். அவர் அதை பார்த்து பூரித்து போய் சிரித்து கொண்டே pose கொடுத்தார்.

செல்லும் வழியில் சிறிது பூ வாங்கி சூடிக்கொண்டு, சூடம் கொஞ்சம் வாங்கி கொண்டு மேலும் நடந்தனர். கோயிலின் வாயிலில் நின்று கொண்டு பிரஹாரம் எவ்வளவு நீண்டு கிடக்கிறது என்று பார்த்து பிரமித்து போய் குடும்பத்தாருக்கு சுட்டி கட்டினார் தந்தையார். பிள்ளைகளும், "யெப்பா! எவ்வளவு தூரம் இருக்கும்?  இது அந்த காலத்து சங்கர் படம் போலிருக்கும் போலருக்கே!", என்று மலைத்து போயினர். [Side note: http://templenet.com/Tamilnadu/s088.html -- to know more about Seerkazhi temple!]

ஒவ்வொரு இடமாய் நின்று தந்தையார் கதைகள் சொல்ல பிள்ளைகள் கதைகள் கேட்டு உள்ளே போய் கொண்டிருந்தனர். ஞானசம்பதர் பற்றி, தோணியப்பர் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டனர். கோயிலின் அமைப்பை பற்றியும் அழகை பற்றியும் பேசினர்.

உள் பிரஹாரதிலிருந்து சட்டநாதர் தரிசிக்க வைத்தார் தந்தையர். முதல் நிலையிலிருந்து மூன்றாம் நிலையில் உள்ள சட்டநாதரை தரிசிக்க முடியும். சட்டநாதரை பற்றி அவருக்கு அதிகமா தெரிந்திருக்கவில்லை. "வேறு யாரிடமாவது தெரிந்து கொள்ளவேண்டும்", என்று கூறினார். பின்னர் சுற்றி மலை கோயிலுக்கு அழைத்து சென்றார். அது மலை ஒன்றும் கிடையாது. ஆனால் மலை போல ஒரு அமைப்பு. கல் படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை கோயிலுக்கு செல்வதற்கு டிக்கெட் வங்கி மேலே ஏறினர். இரண்டாம் நிலையில் இருந்த தோணியப்பரை தரிசித்து முன்றாம் நிலைக்கு சென்றனர்.

அங்குதான் சட்டநாதர் அருளிக்கொண்டிருப்பார். படி ஏற ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்தார். வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். முகத்தில் வெள்ளை முடியுமாக பற்கள் பழுப்புமாக இருந்தார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர்அந்த குடும்பத்தோடு பேச ஆரம்பித்தார். சட்டநாதர் பற்றி சொன்னார். அவரின் கதையை விளக்கினார். "அவர வேண்டிக்கங்க! எல்லாம் நல்ல படியா நடக்கும்." பிறகு தன்னை பற்றியம் தன் கை போன கதையும் சொன்னார்.

அவருக்கு ஏதாவது உதவி செய்யனும் என தோன்ற, அவருக்கு ஒரு 50 ரூபா நோட்டை எடுத்து கொடுத்தார். "ரொம்ப நன்றி ஐயா! இத வாங்கிங்க!" என்றார். அந்த மனிதர் வாங்க மறுத்தார். தந்தையார் மீண்டும் "ஐயா! நீங்க வாங்கி கொண்டே ஆக வேண்டும்" என்றார். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தார். குடும்பத்தார் அனைவரும் அவர் சொன்ன விஷயங்கள் பற்றியும், சொன்ன விதம் பற்றியும் நினைத்து பார்த்து திகைத்து போய் நின்றனர்.

தந்தையார் அவர தேடி ஓடினார், காசு கொடுத்ததை இழிவா நினைத்து கொண்டிருப்பாரோ என்று தோன்ற அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓடினார். படிகளில் அவர் தென்படவில்லை. கீழே சென்று தேடி பார்த்தார். ம்ஹும்! காணவில்லை! அங்கிருந்த சிலரிடம் அந்த மனிதரின் அடையாளம் சொல்லி விசாரித்தார். "அப்படி யாரையும் பார்க்கவில்லை", என்றனர். மலை கோயிலுக்கு டிக்கெட் விற்று கொண்டிருதவரிடம் விசாரித்தார்! அவருக்கும் தெரியவில்ல! 'இறைவா, யார் அந்த மனிதர்!' ம்ம்ம்! ஒரு பெரு மூச்சு விட்டு மீண்டும் மேல ஏறி சட்டநாதரை தரிசிக்க சென்றார்!





Friday, September 21, 2012

அப்பாவும் பால்ராசும்!

பால்ரசுவுக்கு படிக்க மிகவும் பிடிக்கும். பெரிசா ரேங்க் எல்லாம் ஒன்றும் வாங்க மாட்டன். ஆனால் நெறைய படிப்பான்.

"லேய் பால்ராசு! இப்ப என்னத்த படிச்சு கலெக்டர் வேலைக்கு போய் கிழிக்க போறியாம்!? பேசாம அப்பாருக்கூட போய் தொழில கத்துக்கலாம் இல்ல?" என்று அம்மா பால் ராச பார்த்து எப்போதும் சொல்லிக்  கொண்டே இருப்பாள். அப்பா அம்மாவை பார்த்து "எந்தாயி, புள்ளைய கடிந்து கொண்டே இருக்கே? சின்ன புள்ளதானே! நாலு எழுத்து படிக்கட்டுமே!" என்பார். 

அப்பாவுக்கு வயதாகிவிட்டது. மிகவும் தளர்ந்து போய் விட்டார். நிதமும் காலையில் தனது சைக்கிள துடைத்து, டையருக்கு காத்து அடித்து, எண்ணெய் குப்பியிலிருந்து எண்ணெய் கிளிக் செய்து... வண்டிய தயார் செய்வார். வண்டியில் பின்னால் பொறுத்த பட்ட மரப் பெட்டியில் கருவாட்ட ரொப்பிக்  கொள்வார்.  தராசையும் எடை கற்களையும் எடுத்துக் கொள்வார். தராசு நிலை சரியா இருக்கா என்று நிறுத்து பார்த்துக் கொள்வார்.

அப்பாவை பார்க்க பாவமாக இருக்கும். நைந்து போன உடலும் கிழிந்து போன உடையும் மனதை உருக்கும். அவருக்கு தொழில் மீது இருந்த பக்தி அவரின் மேல் ஒரு பெரு மரியாதையை உருவாக்கும். அவரின் உழைப்பு என்ன? அவருக்கு என்ன ஊதியம்? என்றெல்லாம் தெரியாது. ஆனா, அம்மா சொல்வது சரிதான். அவருக்கு உதவி செய்த்தான் வேண்டும் என்று தோணும்.

"புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காது. பால் ராசு இன்னைக்கே கிளம்பிடு!" என்று சொல்லி ஒரு நாள் அம்மா தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரிவிட்டு அப்பாவோடு அனுப்பி வைத்தார். அம்மாவிடம் கெஞ்சினான், "எட்டாம் வகுப்பாவது முடிச்டிடறேமா!"

அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அம்மாவுக்கு என்னவோ கவலை இருந்தது. அது அப்பா மேலா இல்ல பால்ராசு மேலா என்று  தெரியவில்லை! அம்மாவை மறுக்க முடியமால் அப்பாவுடன் கிளம்பினான். அப்பா வியாபாரம் செய்யவத கவனித்து வந்தான். வெயில் வாட்டியது.

சில வாடிக்கையாளர்கள் குசலம் விசாரித்தார்கள். "என்ன கருவாட்டுகாரரே, உங்க பையனா? நல்லா சுட்டியா இருக்கானே! படிக்கவைக்கலையா?"

வீடு வந்து சேர்ந்த போது மிகவும் சோர்வாக இருந்தது. வியர்வையோடு கருவாட்டு நாற்றமும் கலந்து குமட்டியது. கிணற்றடிக்கு போய் மேலுக்கு ரெண்டு வாளி தண்ணீர் விட்டு குளித்து வந்தான். சாமி கும்பிட்டு விட்டு அம்மாவிடம் அப்பாவின் பெருமையெல்லாம் பேச ஆரம்பித்தான். அப்பாவின் கஷ்டங்கள் பற்றி பேசினான்.

அம்மா பெருமூச்சு விட்டார். பால்ரசு மேல் நம்பிக்கயுடன், "தம்பி! ரொம்ப நன்றிப்பா! அப்பாவுக்கு ஒத்தாசையா இரு!" என்று அணைத்து கொண்டார்.

இரவு சாப்பிட்டு விளக்கனைத்து படுத்தனர். பால்ராசு, "இதோ வந்திடறேன்மா!" என்று சொல்லிவிட்டு அவனோட ஃபிரன்ட்வீட்டுக்கு ஓடினான். "இன்னைக்கு கிளாஸ்ல வாத்தியார் என்னடா சொல்லிகொடுதாறு?"

Wednesday, September 19, 2012

சோற்றுக்காக சைக்கிளில் ...

பள்ளிவிட்டு வரும் போது தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது -- தேருமுட்டி தெருவில் முச்சந்தியில் ஒரே கூட்டமாக இருந்தது.  என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள்ளே ஒரு ஆர்வம் துடித்தது.

முச்சந்தியில் ஒரு மூங்கில் மரம் நடப்பட்டிருந்தது. அதன் உச்சியில் ஒரு ஸ்பீக்கர் கட்டபட்டிருந்தது. கீழே மக்கள் குழுமி இருந்தனர். சின்ன பிள்ளைகள் குறுக்கும் நெருக்கும் ஓடி கொண்டிருந்தனர். அட! சில தாவணிகளும் தென்பட்டது. கிட்ட நெருங்க நெருங்க என்ன நடக்குதுன்னு அறிய முடிந்தது.

"டேய் மச்சி! என்ன விஷேசம்! என்ன நடக்குது?"

"யாருன்னு தெரியல்ல! ஒரு ஆளு மூனு நாளைக்கு நிறுத்தாம சைக்கிள் ஓட்ட போறாராம். குடும்பத்தோட கேம்ப் அடிச்சியிருக்காரு!"

"மூனு நாளா? எப்பிடிடா? முடியுமா என்ன?!"

"தெரியல மச்சான், பார்க்கலாம்!"

- ஒரு பழைய டேப் ரெக்காடர், சில டேப்கள் மஞ்சள் பைககுள், ஒரு ஒலிப்பெருக்கி.

- ஒரு நடு வயது பெண்மணி, நைத்து போன புடவையுடனும், கிழிந்து போன மேலாடை, நருங்கி போன உடலும், ஆசை மிகுந்த கண்களுடனும், தன் ஆம்பளைக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

- ரெண்டு குழந்தைகள், கிழிந்த பாவடையும் சட்டையுமாக, மூக்கு ஒழுக, ஒட்டிய முகத்துடன் தாயாருக்கு துணையாக வேலை செய்து கொண்டிருத்த்துகள்.

- ஒரு டோலக்கு, ரெண்டு பாத்திரங்கள்.

- ஒரு சைக்கிள் - கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ், சில ஜோடனைகள், ஒரு சாமி படம், எல்லாம் இருந்த்தது.

பக்கத்தில் இருந்த ஒரு வீட்டுக்காரரிடம் கெஞ்சி கொஞ்சம் மின்சாரம் எடுத்து டேப் ரெகார்டரில் பாட்டு போட்டு சத்தம் சரியாய் வருதா என்று டெஸ்ட் பண்ணி பார்த்து கொண்டார். சாமி படத்துக்கு சூடம் ஏற்றி கடவுளை வேண்டி கொண்டார். இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்த பிள்ளைகளை முதுகில் தட்டி சாமி கும்பிட சொன்னார்.

"கடவுளே! இந்த ஊர் சனங்களுக்கு இரக்கம் உள்ள மனச கொடு. சோறும் காசும் கொடுக்க நல்ல வசதிய கொடு. சைக்கிள ஓட்ட தெம்பும் மனசும் கொடு!" சூடம் காட்டி சைக்கிளை கும்பிட்டு மேல ஏறி மிதிக்க ஆரம்பித்தார். ஊர் சனங்க கை தட்டி அவர உற்சாக படித்தினர்.

அந்த டேப்பை போட்டு விட சாமி பாட்டோடு தொடங்கியது. ஊர் மக்கள் கை தட்டி கொண்டிருந்தனர். அந்த முங்கில் மரத்தை சுற்றி வலம் வந்தார். சைக்கிள சில வித்தைகள் செய்து காண்பித்தார்.  வித்தைகள் செய்யும் போதெல்லாம் அந்த குழந்தைகள் தட்டு ஏந்தி மக்களிடம் வந்து நின்றனர். சிலர் புகழ்ந்து பேசி காசு போட்டனர். காசு போட்டா அந்த குழந்தைகள் சில வித்தைகள் செய்து காண்பித்தனர்.

சில நிமிஷங்கள், மணிகள் கடந்தன. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக களைந்து போயி கொண்டிருந்தது. வீடுகளில் வெளக்கு ஏற்ற மக்கள் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினர். அந்த பெண்மணி பாத்திரம் எடுத்து வீட்டு வாசலில் வந்து நின்று "அம்மா! ஏதாவது மீதி இருந்தா போடுங்கம்மா!" என்று கூவினார். சிலர் சோறு போட்டனர், சிலர் "அப்பறமா வாம்மா!" என்று சொல்லி அனுப்பினர்.

முதல் நாள் இரவு, சிலர் வெகு நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தனர், இன்னும் ஒட்டி கொண்டிருக்கிரா, என்று பார்த்து விட்டு சென்றார்கள்.

நானும் சென்று பார்த்தேன், ரெண்டாம் நாள் இரவில். அவர் களைத்து போய் சைக்கிளில் உட்கார்ந்த வண்ணம் முங்கில் மரத்தில் சாய்ந்து உறங்காமல் உறங்கினார். பிள்ளைகள் மடங்கி சுருங்கி தூங்கி கொண்டிருந்தனர். அந்த பெண்மணி கணவனின் காலை பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். நடுநடுவே காலை தொட்டு கண்களில் ஒத்தி கொண்டார்.

அந்த நிலையில் பார்த்துடன் எனுக்குள் என்னவோ நடந்தது. வயிற்ருக்குள் என்னவோ சுருண்டு கொண்டு வந்தது. என் கண்களில் தண்ணிர் கொட்டியது.  வீட்டக்குள் ஓடி ஓ என்று கத்தாமல் கத்தி அழுதேன். கடவுளே! கடவுளே! என்று கதறினேன்.

யாருக்கும் தெரியாமல் என்னோட உண்டியலையும் போர்வையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் வெளியே ஓடினேன். உண்டியலை அந்த அம்மாவிடம் கொடுத்தேன். போர்வையை அந்த குழந்தைகள் மேல் போர்த்தி விட்டு அப்படியே அவர் காலில் விழுந்து வணங்கினேன்! "இறைவா! இந்த குடும்பத்தை காப்பாற்று!", என்று வேண்டினேன்.